ஒலித்துக் கொண்டிருக்கும் இசை நாடா


ஆம்,
எனக்கு ஒரு விசேஷ பழக்கம் இருக்கிறது.
அது,
வித்தியாசங்கள் நிறைந்த
இசைக் கோப்புகளை
சேகரிப்பது.

இசைத்தட்டின்
ஒவ்வொரு இழை இசையும்
ஒன்றுக்கொன்று சற்றும் தொடர்பற்ற
விநோத சப்தங்கள் நிறைந்தவை.

இந்த விசேஷ பழக்கத்தின்
வித்தியாச இசை கோப்பினுடைய
விநோத சப்தங்களை
நீங்கள் கேட்க துவங்கையில்
அந்தந்த காலத்தின்
நினைவுகளில் நிறுத்தி
உங்களை சுழல வைக்கும்.

இங்கிருக்கும் ஏதோ ஓர்
இசைக் கோப்பில்
யாருமின்றி நீங்கள்
உடைந்து கதறி அழுத பொழுதொன்றில்
கண்ணீர் துடைக்க
ஆளின்றி இருந்த அந்த கணத்தை
இப்போது கேட்கையிலும் ஒலிக்கிறது
அன்றிருந்த  அதே நிசப்தத்தின் சப்த்தம்.

இதோ மக்களுக்கு எதிராய்
நடந்து கொண்டிருக்கும் அரசியல்;
அந்த அரசியலுக்கு எதிராய் செய்யப்படும் புரட்சி;
புரட்சி என்கிற பெயரில்
செய்யப்படும் அரசியல்.
இப்படியாக
முடிவிலா சுழற்சியில்
இயங்கும் 
ஒரு விடையில்லா
வினாக்கள் மட்டுமே நிறைந்து இசைக்கும் ஒரு  கோப்பு.

இப்போதைக்கு என் இசைத் தட்டில்
திகட்டத் திகட்ட
காதல் மலரும் இசை
இசைத்து கொண்டிருக்கிறது.
நான்
தற்பொழுது என் வசந்த காலத்தில் சுழன்றபடி
கவலை ஏதுமற்ற
அளவிலா அன்பின்
காட்சி இலைகளில் ஒன்றான
என் பால்ய சகி சுசீலாவுடன்
உரையாடிக்கொண்டிருக்கிறேன்.

மீதமிருக்கும்
இசைக் கோப்புகளை
பற்றி சொல்ல
நான் உங்களை பிரிதொரு
கால சுழற்சியில் சந்திக்கிறேன்.

இப்படி என்னைச் சுற்றி
சொல்லியும் சொல்லாமலும்
இன்னும் இன்னும்
நிறைய நிறைய
நிறைந்திருக்கிறது
இசை.
இவை
எல்லாமும் சேர்ந்து
சேர்த்து செய்யப்பட்டது தான்
என் இசை முகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி