நானொரு மகிழ்பரி

*
மேலிருந்து கீழ் நோக்கி
மூன்று வார்த்தை
கீழிருந்து மேல் நோக்கி
மூன்று வார்த்தை
இடமிருந்து வலமாக
மூன்று வார்த்தை
வலமிருந்து இடமாக
மூன்று வார்த்தை
திக்கித் திணறி
தப்பும் தவறுமாய் நிரப்புகையில்
யாவற்றுக்கும்
கடைசியாக
கழுத்தின் பக்கவாட்டில்
கைவைத்து சிரித்தபடி
பதுவசாக பார்க்கையில்
பித்து மொத்தமும் தலைக்கேறி கிறுக்கெழுத்துப்புதிராகிவிடுகிறேன்.
*சிறப்பு குறிப்பு:
மேற்சொன்ன மூன்றெழுத்து வார்த்தை
காதல் மட்டும் அல்ல

நான்
குவிந்து கிடக்கும்
எண்ணற்ற ஸ்மைலிக்களில்
நீங்கள் சொல்லத் தயங்கும் 
ஒரு சிறு அன்பை
சின்னச் சின்ன கண்களில் நிரப்பி
அதில் செல்ல வெட்கச்சிவப்பாய்
காதல் மின்னும்
புன்னகைகளை செய்பவன்
நான்
எக்கச்சக்கமாய் கிடைக்கும்
இச்சை நிறைந்த
பல வண்ண இதயங்கள் இருந்தாலும்
பச்சை வண்ண இதயம் மட்டுமே
எனக்குப் பிடித்திருந்தாலும்
துடிக்கத் துடிக்க துடிப்பாய்
அன்பைச் சொல்லும்
சுகந்தமான செக்கச்சிவந்த
ரத்த இதயமும் எனக்கு செய்யத்தெரியும்
நான்
ஆச்சர்யங்களைக் கூட
கண்களில் நட்சத்திரங்கள் வைத்து
உங்கள் பிரம்மிப்பை
ஒரு பிரம்மாண்ட
பிம்பமாய் செய்பவன்
நான்
இன்னும் மிக மிகச் சின்னதாய்
ஓராயிரம் ஸ்மைலிக்கள் வைத்திருக்கிறேன் எனக்குள்ளே
பிரியங்களைத் தவிர
அதிகம் பிரித்துப் பிரித்து
சொல்ல பிரிதொன்றுமில்லை
என்னிடம்
நான்
அன்பைச் சொல்லும்
அத்துனை அத்துனை
ஸ்மைலிக்களின்
ஒட்டுமொத்த வியாபரத்தின்
ஒரே ஒரு
தயாரிப்பு அதிகாரி


தனித்தலையும் இப்பெருவெளியில் உங்கள் நினைவில் 
ஒரு மிகச்சில நொடிகள் 
உங்கள் கண்முன் 
நான் வந்து மறைகையில் எல்லாம் என்னிடம் உங்கள் எல்லோர்க்கும் 
என்றும் கொடுக்க 
எப்போதும் கொஞ்சமே கொஞ்சம் சின்னஞ்சிறிய சிறு அன்பினை சேகரித்துக் கொண்டே இருக்கும் 
ஒரு நன்றி மிருகம் நான் 
❤️
01.01.2019
1.43 am

~ஒரு தேவதையை காண்பதற்கான காத்திருப்பு காலம்~
ஆம்
எனக்கு
இது கொஞ்சம் 
மகிழ்வாகத் தான்
இருக்கிறது இப்போது
சொல்லப்போனால்
பிடித்திருக்கிறது
காத்திருத்தல் என்றுமே
எரிச்சலூட்டும் ஒன்றாகவும்
தேவையற்ற
நேர விரயம் என்றும்
எப்போதும் எனக்குள்
ஒரு பொதுவான எண்ணம் இருந்தது
ஆனால் இன்றைக்கு
அது அப்படி இல்லை
என்றே தோன்றியது
இதோ
இந்த இடம்
இங்கு நடந்து கொண்டிருக்கும்
நிகழ்வுகள்
எல்லாமே கொஞ்சம்
முன்னும் பின்னுமாய்
இயல்பில் சொல்வதென்றால்
மெல்ல ஓடும் ஒரு நீரோடையில்
அதன்மீது வீசும்
தென்றலின் தொடுதலில்
சீரில்லாமல் நீரின்மேல் படரும்
காற்றின் மென்வருடலைப்போல
சில்லென உணர்ந்தேன்
அவள் வருகைக்காய்
நான் காத்திருக்கும்
இந்தக் கணங்கள்
யாவும்
ஒரு ஜென் கவிதையைப் போல
இதோ
இந்தப் பூங்காவின்மரத்திலிருந்து
இப்போது
என் தலையின் மீது
வெகு இயல்பாய் விழுந்த
இந்த மஞ்சள் கொன்றை
அப்படியே உன்னைப்போல
நீ என்னுள் நுழைந்ததைப்போல
இந்த காற்றைப்போல
காதலைப்போல
அவ்வளவும்
அன்பின் பிரியம்
இயற்கையின்
இயல்பு விதி
நீ என்னவோ
கோவமாய் இருப்பதைப்போல
முகம் திருப்பித்தான் அமர்ந்திருக்காய்;
இருந்தும்
என்ன செய்ய ?
பாவம் உனக்கு கோபப்படக்கூட
இந்தக் காதலும்
அதன் கண்களும்
விட்டுக்கொடுப்பதில்லை
இப்படி காட்டிக்கொடுத்துவிடுகின்றன.
போதும் போதும் சிரித்துவிடு
உன்னால் அவ்வளவுதான்
நடிக்கமுடியும் என்பது எனக்கும் தெரியும்
அனேகமாய் இப்போது
இங்கிருக்கும் எல்லோருக்கும்
தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
என்னங்க அப்படித்தானே?


~காதல்~
💚
ஆகப்பெரும் அன்பின்
அரூப ஆலாபனை

சின்னச் சின்னதாய் 
நீ சிந்திய 
புன்னகைகளை 
எல்லாம் 
கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து
நான் எழுதிய
மொத்த கவிதைகளுக்கும்
சமர்ப்பணம்
நீ ஒற்றை கண்ணை சிமிட்டியபடி
சிரிக்கும் அந்த ஒரு செல்ஃபி

இயல்பில் 
நீயில்லாமல் போனாலும்
நிகழ்ந்து கொண்டேதானிருக்கும்
சுழலும் இப்பெருவாழ்வு.


தண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்
-------------------------------------------------------------------------------------------------
மிகச்சரியாக
வாழநினைத்து
இப்போது
தண்டவாளத்தில்
ஒரு ஒழுங்கில்லாமல்
சிதறிக்கிடக்கிறது
அவனின்
உடல் தசைகள்
தொடர்பற்று;
ரத்தசிவப்பு நிறம்
கொஞ்சம் கொஞ்சமாக
அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது.
சுற்றி நிற்பவர்களின்
அனேக அனுமானங்களும்
சில நிஜங்களும்
குறித்துக்கொள்ளபடுகின்றது
அவனின் கதைக்கான
கடைசி
அத்தியாய
பக்கங்களை
நிரப்புவதற்காய்.
இதோ
அவன் வந்துவிட்டான்
சுற்றி நிற்கும் அனைவருக்கும்
ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு
அவன் வேலையை ஆரம்பித்தான்
தசையின்
வாசம்
அவனது
நாசிகளுக்கு
எந்த நெடியையும்
ஏற்படுத்தவில்லை;
ஒவ்வொரு
துண்டுகளையும்
பார்த்துப் பார்த்து
மிகச்சரியாக எடுத்துக்கொண்டிருந்தான்.
அங்கிருப்போரின்
அழுகுரல்,
விசாரணைகள்,
எதுவும்
அவன் செவிகளுக்குள்
இறங்கவில்லை.
மொத்தமாக
எடுத்து ஓலைக்குள் வைத்து
அவிழாமல் அதே சமயம் இறுக்கங்கலற்று
மடித்துக்கட்டி
முடிந்துவிட்டதாய்
சமிக்ஞை செய்கிறான்
பீடியைப் புகைத்தவாறே...
அந்த இடத்தின்
கடைசிக்காட்சியாக
அவன் கைகளில்
சில நூறு ரூபாய்களுடன்
நடந்து போயகொண்டிருக்கிறான்
ஒரு முழுவாரத்தின்
பசித்த வயிறுடன்.
~தெருவாசகம்~
ஒரே பயணம்; ஒரே சலனம்
ஒரே நடை; ஒரே விடை
தாயுமாகிய தகப்பனும் 
தகப்பனின் குலசாமியும்
எட்டுவைத்து நகர்கிறார்கள்
விதியின் வீதியுலா காட்சியில்

மனமெனும் பெருவெளி;
ஒரு வடிவத்தினுள் சிக்காத கலைடாஸ்கோப் சித்திரம்


எல்லோருக்குமான சின்ன சின்ன அன்பின் பிரார்த்தனைகளில் எல்லோருக்கும் பிரியமாய் பிரத்யேகமாய் விடிகிறது இந்த விழா நாளின்
மார்கழி அதிகாலை

தினமும் உழலும் மனதில்
தீராமல் சுழலும்
பச்சை வர்ண இச்சை மருகிய ஒற்றைச்சுருளாய்
ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்வில் வாய்த்திருக்கிறது 
ஒரே ஒரு ஒற்றைக் காதலிலை



⭐️

வண்ணங்கள் மிளிரும் இந்த விழாக்காலத்தின் ஒளிரும் ஒற்றை நட்சத்திர வெளிச்சமாய் குளிரும் வெண்பனி இவ்விரவு

~🐎 நானொரு மகிழ்பரி 🐎~
🔥
முன்பொரு காலத்தில்
நான் எந்தவொரு பெரு வெற்றியையும் காணவில்லையெனினும் 
ஒரு மகிழ்பரியாய் இருந்தேன்.
எனக்கு நானே
ஒரு தனிக்காட்டு ராஜாவாய்
சகல சொகர்யங்களுடன் இருந்தேன்.
மழை வெயில் பனி
காலை மாலை இரவு
இதுமாதிரியான
கால நேரம் பற்றிய
கவலைகளேதுமற்று
கழியும் பொழுதுகளுக்கு
நான் என்றைக்கும்
வருந்தியதேயில்லை.
என் காலத்தின் கடைசிவரையிலும்
நான் அப்படியேதானிருந்தேன்.
எனக்கான ராஜ சாம்ராஜ்ஜியம்
எனக்காக மின்னும் சில நட்சத்திரங்கள்
எனக்காக விடியும் ஒரு சூரியன்
எனக்கென பொழியும்
எப்போதும் ஒரு வட்டநிலா
என்றும் மூன்றாம் பிறையில் இருக்கும் மற்றொரு குட்டிநிலா
என்மீது மட்டும் அவ்வப்போது
மென் தூரல் போடும்
மெல்லிய மோகன மழை
நினைக்கையில் எல்லாம்
கேட்கும் இன்னிசை
சிரிக்கையில் எல்லாம்
பறக்கும் பறவைகள்
எனக்காய் என்றும் மாலை நேரமாய் காட்சியளிக்கும் ஒரு மஞ்சள் வெயில்
ஆகமொத்தம் எனக்கே எனக்கென
ஒரு உலகத்தினையே
சிருஷ்டித்து அதன் சக்கரவர்த்தியாய் இருந்தேன்
இப்போது
எவ்வித உணர்வுமில்லாதொரு மண்குதிரையாய்
ஒரு கண்ணாடி மாளிகையில் இருக்கிறேன்.
அதானலென்னவென
அனாயசமாக கடந்து செல்பவர்களை
நான் ஒரு பொருட்டாக என்றைக்கும்
நினைப்பதேயில்லை எப்போதும்.
ஏனென்றால்
உங்களால் கற்பனையிலும்
காண முடியாத பெரும் பிரம்மாண்டம்
நான் இன்றைக்கும் வசிக்கும்
என் கவிராஜசாம்ராஜ்ஜியம்
அதன் என்றென்றைக்குமான
சக்கரவர்த்தி நான்.

விட்டு விட்டு எரியும்
மின்சார விளக்கின் ஒளியில்
முட்டி மோதும் விட்டில் பூச்சி போல்
இந்த வாழ்க்கை
இணைப்பெருங்காதலின்
தனித்த ஒரு ஜோடி பாதங்கள்

இன்றைக்கும் என்றைக்கும்
இனி எந்த பேருந்தில் போனாலும்
இயல்பில் மீண்டும் மீளாது
இசை போல ரம்மியமாய்
இழைந்திருந்த பால்யகால பள்ளி நாட்கள்

ஒளிரும் கனவுகளின் உன்மத்த விழிகள்


இப்படியாகவும் ஓர் வாழ்வு
இப்படியாகவும் ஓர் இரவு
இப்படியாகவும் ஓர் துயில்
-
இப்படியாக ஒரு வாழ்வு
இப்படியாக ஒரு இரவு
இப்படியாக ஒரு துயில்


🔥

இரவகலின் சுடரும் ஒளியில்
மெல்லப் படரும் முத்தத்தீ

ஒளியினைப் பருகும் இப்பெருவெளியினில் நானும் ஒரு சிறுபுள்ளி ஒளித்துகள்


~மலர்தலே காதல்~
ஆம்
யாரும் என்னை
அதிகம் விரும்பி சூடுவதில்லை தான்.
மற்றபடி என்னை நீங்கள் எளிதாகக் காணலாம்.
எல்லா பூங்காவிலும்
என்னை நீங்கள் ஒரு முறையேனும்
கையில் பறித்து வைத்துக்கொண்டு உங்கள் பிரியமானவரின் வருகைக்காக
காத்திருந்திருப்பீர்கள்.
அப்போது என் மெல்லிய இதழ்களை
ஒவ்வொன்றாய் பறித்து நேரத்தினை கடத்தியிருந்திருப்பீர்கள்.
எல்லா கோவிலிலிலும் எனக்கென சலுகையாய் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறார்கள்.
என்னை சுற்றிலும் இருக்கும்
எல்லா நறுமண மலர்களையும்
நான் ஒருபோதும்
கவனிக்காமல் இருந்ததில்லை. ஒவ்வொன்றின் நிறமும்
அதன் இதழ்களும்
அவற்றின் கமழும் வாசனையையும்
நான் நுகர்ந்திருக்கிறேன். சொல்லப்போனால்
எனக்கு தனித்தனியாய்
எல்லாமும் பிடித்திருந்தது.
என்னிடம் வந்து பேச
எப்போதும் சில சிறுவர்களும் சிறுமிகளும் இருக்கிறார்கள்.
அவர்கள் என்றைக்கும் என்னிடம் வாசனையை எதிர்பார்த்ததே இல்லை
என்னை போலவே அவர்களும் வெள்ளந்திகள்.
என்னை கையில் பற்றி வைத்தபடி அவர்கள் விளையாடி முடித்து என்னைவிட்டு போகையில் எல்லாம் அவர்களுடனே வீடு செல்ல தோன்றும்
ஒவ்வொருமுறையும்.
பின்பு
அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லையென எனக்கு நானே எப்போதும் போல சமாதானம் சொல்லிக்கொள்வேன்.
அப்போதைக்கு
என்னிலிருந்து
காற்றின் இசைவில்
மெல்லமாய் ஒரு மலர்
தரை பார்த்து கவிழ்ந்திறங்கும்.
எனக்கு எல்லாமும் இருக்கிறது.
நான் மிகவும் இயல்பாய்
மகிழ்வாய் இருக்கிறேன்.
நான் ஒரு போதும் மலர்தலை நிறுத்தியதில்லை.
எப்போதும் நான்
நானாக இருக்கிறேன்.
எல்லாக் காதலையும்
எனக்குள்ளே எழுதி வைத்திருக்கும் நானொரு காகித மலர்;
ஆம்
நானொரு வெள்ளைக்காகித மலர்.

நான் நள்ளிரவின் மொத்த இருள்
நீ வெண்ணிலவின் பரிசுத்த ஒளி

உன் நினைவின் நினைவாக
நீ என்றேனும் நினைத்துப் பார்த்து புன்னகைக்க கொடுக்கப்படும் அன்பே
ஆகச்சிறந்த பரிசு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு