இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி-II

இது போல ஒரு மாலைப்பொழுதினில். எங்கள் பழைய வீட்டின் முன்னிருந்த இன்னமும் என் நினைவுச்சில்லிலிருந்து ஞாபகத்திற்கு வர மறுக்கும் அந்த மரத்திலிருந்த பூவினை அவளின் மருதாணி விரல்களால் என் கைகளைப்பிடித்து எல்லா விரல்களுக்கும் பூ நகங்கள் வைத்த உடன் நான் 'தம்ராஜ் கில்விசனாய்' மாறி இருள் நீடிக்கின்றது என்று நான் சொல்லிய போது, கன்னங்கள் சிவக்க அவள் சிரித்தது அப்படியே காட்சியாய் விரிந்தது ஷக்திமானை பற்றி பேசிக்கொண்டிருந்த இன்றைய மதிய வேளையினில்.. இரவுகளின் ரம்மியமாய் கனவு விழியின் ஓரத்தில் அரும்பிய பின்னொரு சமயத்தினில் மணல் துகள்களில் காந்தச்சில்லுகளைத்தேடி பேய் துறத்தி விளையாடியதில் கிடைத்த அரிதான பேய்களை பற்றி அவளால் சொல்லப்பட்ட கதையில் ஒன்றான ஒற்றைக்கால் கருப்பி இன்னமும் என்னுள் வந்து போகிறாள் அவளை நலம் விசாரித்ததாய் சொல்லச்சொல்லி..

சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி -- I

சித்தார்த்தனின் சொப்பனத்தில் எப்போதும் போல இன்றும் மாறாமல் வந்துவிட்டது அந்தக்காட்சி, என்றும் ஈரம் தாங்கிய பூக்களின் நறுமணமாய் பதியமாகிப் போன சுசீலாவைப் பற்றிய புன்னகைக்குறிப்புகளில் ஒன்று. மழைக்கு பிந்தைய அதிகாலைப் பொழுதொன்றில் வீட்டின் அருகிருந்த புல்வெளிக்காட்டில் சிறு சிறு வெண்குடைக்காளான்களை ஓடி ஓடித்தேடி மண்ணைத் தோண்டி அடித்தண்டு வேர்முறியாமல் பறித்ததில் சிதறிய அவளுடைய கொலுசின் சிணுங்கல்கள் மீட்டும் வெள்ளி மணிகளின் சமிக்ஞையை போல.

குடைமழைக்காலம்

இன்னமும் முழுவதுமாய் வரைந்து முடிக்கவில்லை அந்த புலரும் வனத்தினுள் நீர்ப்பூக்கள் மிதக்கும் கண்ணாடி சாளரத்தின் வழியாக முற்றிலும் வெப்பமற்ற ஒரு நடுமதிய வேளையில் நின்றபடி இருக்கும் என் பிடரியில் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி உற்புகும் குளிராய் உன் இதழின் கதகதப்பினை வரைய வண்ணங்களை குழைத்துக்கொட்டுகிறேன் ரத்தசிவப்பை துப்பும் இச்சையின் மிச்சங்களாக...