இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காற்று-வழி

* தனல் ஜுவாலையின் சிவப்பினில் இருந்து மஞ்சள் நிறமிழந்து கரியமாய் மாறி காற்றினில் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது தடயங்கள் எல்லாமும். * ஊதல் காற்று செய்யும் ஊடல் நீ தெளிக்கும் வெட்கத்தில் சிவந்து மஞ்சள் உமிழும் மாநகர விளக்கின் கீழ் சிலிர்ந்து செல்கிறது உனை கடந்து. * தூரத்தில் வரும் சுழல் காற்று உன் கற்றை குழல் கலையாமல் இருக்க வேண்டி சட்டென நிலைகுழைந்து சுழியமாகிறது உன் விழிகளின் கலவரம் உணர்ந்து. * நீ உன் ஈரக் கூந்தல் உலர்த்துகையில் காற்றில் சிறு சாரல் ஒன்று அரும்பி சில்லென கனம் குறைந்து குளிர் இறங்குகிறது காட்றதன் உஷ்ணத்தின் உள்ளே. * இரவின் விழியில் காற்றின் அலை குறைவதே இல்லை எப்போதும் ரீங்காரமிடும் பாடலைப் போல அது ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நிலா இரவு

* மொட்டை மாடியில் நின்று நிசப்தமான  இந்த இரவில் நிலா பார்க்கையில் இன்னமும் நீதான் தெரிகிறாய் எனக்கு மட்டும் * மெல்லிய மேகமாய்  உனை தொட்டுத் தீண்டும்  முகில்  இதழ்கள் எனதாகும் நெருங்கும் பொழுதெல்லாம் உன் வெட்கத்தால் வெளிச்சம் கூடிப்போகிறது வான் முகம் * ரம்மியமான  நட்சத்திரமாகி மின்னி  சிரிக்கிறது நம் சந்திப்புகளின் தடயங்கள் எத்தனை என்பதை  எண்ண முடியாமல் * வீசும்  காற்றின் அலைவரிசைக்கேற்ப கூடுகிறது ஊடலின் வெப்பம்  * விடியும் வரையும்  நீ நிலா நான் மேகம் விடிந்த பின்னால் நீ ஒளி நான் பகல் *

தரிசனம்

இந்த மாலை நேரத்தில் நான் மட்டும் தனியே கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் இன்னமும் உன்னுடன் கைபிடித்து நடந்து கொண்டு வேண்டிய தரிசன காட்சி ஒவ்வொன்றாக மீள்கிறது; சீரான வரிசையில் உள்ளே நுழையும் பொழுது சட்டென என் கைகளை உன் கையுடன் சேர்த்து இருவரும் ஒன்றாக வலது கால் எடுத்து வைத்து சென்றது; சாமி கும்பிட்டபின் கற்பூர ஆரத்தியினை நீ தொட்டு வணங்கியது; எல்லோரும் கண்ணாடி பார்த்து பொட்டு வைக்கையில் அதை பார்க்காமலே பொட்டு வைக்க சொல்லி தந்தது; நான் தான் வைப்பேன் என என் நெற்றியில் நீ வைத்து விட்ட சந்தனத்தின் ஈரம் திருநீறின் வாசம் இன்னமும் அப்படியே இருப்பதுபோல இருக்கிறது; மொத்தமாக எல்லாமும் என் இதழ்களின் ஓரத்தில் புன்னகையாய் மலர்ந்து பின் உதிர்க்க தொடங்கியது ஞாபக பூக்களை.

முகில்களின் வழியே

அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறேன் மேகங்களின் இடப்பெயர்வை; பள்ளி செல்வதற்காய் சைக்கிளில் செல்லும் போது கல்லும் மண்ணுமாய் இருந்த பாதையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வருகையில் சுசீலா உடனான உரையாடல்கள் தனியே ஒரு வெள்ளை முகிலில் கடந்து போவதை காண முடிந்தது; அவ்வளவு பெரிய வானத்திலும் நாங்கள் இளைப்பாற நின்ற பெரிய புளியமரத்தின் கீழே உதிர்ந்து கிடந்த புளியங்காய் முகில் சில்லில் கூசிப்போனது பற்கள்; கொஞ்சம் பிற்பாடு அலைஅலையாய் தொடர்ந்து வந்த முகில்கள் எல்லாம் எழுப்பிய பெரும் சத்தத்தில் எங்கள் ஊரிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பும் கே 5 பேருந்தின் பச்சை வண்ணமும் கத்தி கத்தியே குரல் வற்றிப்போன கண்டக்டர் நடராஜன் அண்ணாவும் கடந்து போய்கொண்டிருகின்றனர் கடைசியாய் போகும் ஒரு மேகமுகிலில் ; எல்லாமும் தனியே எந்த ஒரு சலனமும் இல்லாமல் நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அமர்ந்திருக்கும் நாற்காலியின் கீழிருக்கும் சுழல் சக்கரம் போல இங்கிருந்து நானும் ஜன்னல்வழி மேகங்களும் தொடர்கின்றன அலைவரிசைகளற்ற பிரயாணங்களை..

அது நீங்களாக கூட இருக்கலாம்

படம்
* எல்லா புகைப்படங்களிலும் ஒளிந்திருக்கிறது இதுவரை நாம் பார்த்திராத யாரோ ஒருவருடைய முகம் * எதேர்ச்சையாய் எடுத்த புகைப்படங்களில் தான் நீங்கள் உண்மையாக சிரித்திருப்பீர்கள் * பின்னாளில் பார்க்கையில் நீங்கள் செயற்கையாக சிரித்த புகைப்படங்கள் எந்தவித விசேஷமான நினைவுகளையும் தாராது. * விலகிய கோணங்களில் எடுத்த புகைப்படம் தான் அதிக பிரியங்களை சுமந்த ஒன்றாக மாறிப்போகும் * பிரியமானவர்களின் புகைப்படங்களை நீங்கள் இப்போது எடுத்து பார்த்தாலும் அவர்களின் கண்கள் உங்களை கண்டவுடன் புன்முருவலிடுவதை உங்களால் மட்டுமே உணர முடியும் ஒருமுறை முயற்சித்து தான் பாருங்களேன். * 

தூவும் மழை

முத்தமழை முகில்களின் நனைதலில் கிட்டத்தட்ட கீழ்வானம் முட்டுகிறது. * கொட்டும் ஒவ்வொரு சொட்டும் மழை சிந்தும் வெட்கம் * ஈரமான இச்சைகள் வெப்பமூட்டும் வெட்கங்களை உதிரிகளாய் தருகின்றது எப்போதும் * எனக்கு மழையில் நனைய பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு இதழ் முத்தம் கொடுக்க தெரியாது என்பது மழைதீகம்! * மழை பிடிக்கும் ஆனாலும் குடை பிடித்து செல்வேன் எனச்சொல்வோர்க்கு கொஞ்சும் ஸ்பரிசங்கள் பற்றிய மெல்லியல் அதீதம் தெரிவதற்கில்லை * லேசான மழையில் நனைந்து வர பிடிக்கும் என்பவர்கள் உங்களின் விழி நீண்ட பார்வையில் ஊடல் செய்யும் காற்றைப்போல் நெடுநேரம் ஊடுருவி செல்லும் ஒளியின் வழி போன்றது முடிவின் எல்லை தூரம் *