இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அர்த்தமற்றவை

படம்
யாரென தெரியாத முகங்கள் கடத்திச் செல்லும் புன்னகையில் இதுவரை தொலைந்து போய் இருக்கிறீர்களா? ஏதுமற்றும் பேச விழையும் விழிகளை கவனித்து பேச மறுக்கும் மனதினை சுமந்து இருக்கிறீர்களா? தொடர்பற்ற சங்கதிகள் எல்லாவற்றுக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பதாய் எண்ணி யாருமற்ற வெளியில் சிரித்துக் கொள்கிறீர்களா? பிடிக்குமா? பிடிக்காதா? என்ற கேள்விகளுக்கு உட்படாமல் முடிய மட்டும் கூடாதென வேண்டி இருக்கிறீர்களா? நாள்தோறும் செல்லும் வழியில் கடந்து போகும் யாரேனும் உங்களுக்கான நினைவுகளை தூவிச் செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா? எல்லோருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென என்ன பேசினோம் இதுவரை என மறந்துபோன ஞாபகங்கள் இன்னும் இருக்கிறதா? இப்படியான ஆதியற்ற தருணங்களின் தகவமைப்புகள் எப்போதும் கட்டமைக்கபடுவதில்லை இப்பொழுது நான் எழுதுவதைப் போல… - ஈ.பிரபாகரன்.

ஜன்னலோரம்

படம்
எல்லா பேருந்துகளிலும் ஏதேனும் ஒரு  ஜன்னலோர இருக்கையில் தலைசாய்த்து கதை  பேசிக் கொண்டிருக்கிறது  ஒரு காதல்! எதிர்காற்றில் கலையும்  உனது முடியினை  சரிசெய்யாமல் இயல்பாக  பேசுகையில் தான்  இன்னும் அழகாக  கலைக்கிறாய் இதயத்தை! நீ  தலைசாய்த்திருந்த  ஜன்னல் கம்பிகளுக்கு எல்லாம்  பிடித்திருக்கிறது  காதல் துரு! மழை பெய்கிறதா என  நீ கை நீட்டி  பார்க்கையில் தான்  நீ கை நீட்டுகிறாயா என  தொட்டுப் பார்க்கிறது  காதல் மழை! எல்லா வழியனுப்புதலின்  போதும் மெதுவாக  நகரத் துவங்குகிறது  முடிவற்ற  தொடர் காதல்; உன் கைபிடித்து! ஈ.பிரபாகரன்.             ( பேருந்தில் பயணிக்கும் என் தேவதைக்காக )

காதல்‬ தி(க)ட்டல்

படம்
ஊடலின்  முடிவில் நீ சொல்லும்  ச்சீ..போடா.. காதலின்  வெட்கம். அறிவிருக்கா டா உனக்கு??? கோபமாகத்தான்  கேட்கிறாய் நீ... காதலின் காதில்  விழவேயில்லை. போடா.. லூசு...  நான் உன்ன  எப்படா  திட்டியிருக்கேன்!! பொய்க் கோபம்கூட பூச்செண்டாகிறது உன் கைவிரல்களால் வருடுகையில். அய்யோ... அது எங்க அப்பாடா.. தலையில் அடித்து சலித்துக் கொள்கிறாய்.. தேவதைகளுக்கும் பயம் வரும் காதலில்! ப்ளீஸ் டா.. ப்ளீஸ்.. இந்த ஒரு வாட்டி மட்டும் என கேட்கையில் குழந்தையிடம்  கொஞ்சும் அன்னையாகிறாய் என்னுள். -- ஈ.பிரபாகரன்.

சுதந்திரம்

படம்
களவு செய் கன்னியின் கற்பை களங்கம் செய்; மன்னிப்போமா தெரியவில்லை மறந்துவிடுவோம் கண்டிப்பாக!!! ஊழல் செய் உதிரி பாகம் தயாரித்தல் தொடங்கி உலக விளையாட்டு வரை; கவலை இல்லை கவனிக்க நேரமில்லை!!! இனத்தை அழித்தவனை அழை புன்னகைத்து புண்ணியதலம் தனை திறக்க!!! ஒவ்வொருமுறை உயிர் துறந்த எல்லைவீரனை பற்றி எவனும் கேட்பதில்லை எதுவும் நடப்பதுமில்லை!! சட்டரீதியாக அணுகப்படும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் சுமுகமான முடிவு எட்டுவோம் விசாரணை நடந்து கொண்டே இருக்கும் அறிக்கைகள் சமர்பிக்கப்படும்!! இப்படியே இன்னும் எத்தனை தலைமுறைகளை தடம் தெரியாமலே தண்டிக்க போகிறோம்!! இது வசன கவி என்றாலும் பரவாயில்லை எழுத்துத்தீ நான் பற்றியது!! எரியும் தனலும் கனன்று எழும் காட்டுத்தீயும் இனி நம்வசம் நண்பர்களே!! மேற்கூறிய யாவுமே இனி மாற்றுவோம் இயன்றவரை இருளில் ஒளி பரவச் செய்வோம் "வெல்க தமிழ் வாழ்க பாரதமென ஆடுவோம் பள்ளு பாடுவோம் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று"!! -ஈ.பிரபாகரன்.

நேற்றைய மழையின் தூரல்--சும்மா ஒரு வர்ணனை

1.துளிஈரம் வானம் தனது ஒளி ஜூவாலையினை விழுங்கி கருநீலம் கலந்த இரவினை மெல்ல நிரப்பிக்கொண்டிருந்தது. அலுவலகம் விடுத்து வெளியே நடந்து வருகையில் மழை இசையில், இலை தழுவி மரம் நனைந்திருந்தது. மண்ஈரமாகிய வாசனையும், துளிச்சாரல் காற்றுடன் தூரத்து நினைவுகளினை தென்றலாய் தீண்டித் துளைத்தது. நத்தையின் நீட்சிநூல் உணர்வில் நகர்வதுபோல சற்று தூரம் வந்தததும் சாலையில் மின்விளக்கின் மஞ்சள், மழை தெறித்ததனால் வீதிவெளியெங்கும் கொட்டிக்கிடந்தது.நிலாவின் ஒளிவளையங்களை சிறிது தாமதித்து  மேகங்களினை கலைத்தபின்தான் நிறுவ வேண்டியிருந்தது. கொன்றைப்பூக்களினால் நிறைந்திருந்த மரம் முழுதும் நாளைய பூக்களின் மொட்டுகள் வெட்கத்தில் குளிர்ந்திருந்தது. சரியாக என்நேர் திரும்பி இணைபிரிந்து பின்வழியில் செல்லும் தோழிக்கு  கையசைத்து விடைகொடுத்துவிட்டு குடை பிடித்து ஒரு மழை  நடந்து சென்றது எனை கடந்து..... -தொடரும்  

நட்பெனும் பெயரற்ற மொழி

படம்
புகைப்படங்களில் மட்டும் இன்னும் மின்னுகிறது நாம் விதைத்த சந்தோசங்களின் நிழல்.. எந்த சுவாரஸ்யங்களும் இல்லை தான் என்றாலும் சொல்லாமல் இருந்ததாய் நினைவில் இல்லை.. புன்னகைகளால் மட்டுமே நிரம்பிய பொழுதுகளின் மாலை வேளையினில் கல்லூரி வெளியே தேநீருடன் நின்று மழை ரசித்தது... படைசூழ வலம்வருதலும்; படிக்காத தேர்வில் எல்லோரும் பெற்ற தவறாத வெற்றியும்... சரியாக ஞாபகமில்லை ஆனால் பேசிவிட்டு கடந்துசென்ற தருணங்களில் எல்லாம் சூடிய பூவின் மணம் விட்டுப்போனதில்லை அவ்வளவு எளிதில்.. அப்படியே உன் யதார்த்தங்களின் சிதறலாய் இன்னும் நீள்கிறது நீ சூடியிருந்த பூக்களை காணும் போதெல்லாம்... ஒரு ஜன்னலோர பயணத்தின் கானலாய் தொடர்பற்ற காட்சி போல இன்னும் எத்தனை பின்தொடரும் நினைவுகளை விதைத்து செல்லும் இந்த வாழ்க்கை... ஒரு நாளின் சுழற்சியில் எத்தனை முறை நினைத்து பார்க்கிறோம் எல்லோரும்; உண்மையாக கணக்கில் வர மறுக்கிறது அல்லவா?? -ஈ.பிரபாகரன்.