பிருந்தாகுட்டியும் சிருங்கார புன்னகையும் 
😍
யாரும் என்னைப்பற்றி 
உன்னிடம் சொல்வதற்கு முன்பே 
உனக்கு எல்லாமும் 
தெரிந்து தான் இருந்தது.
இருந்தபோதிலும்
எதுவுமே தெரியாதது போல் இருக்க
ஒவ்வொரு முறையும் என்னை
ஏமாற்றுவதாய் நினைத்து
ஒரு குழந்தையை போல
நீ செய்யும் பிரயத்தனங்களை
பார்க்கையிலெல்லாம்
தவறு செய்து மாட்டிக்கொண்ட பிறகு
தாயின் பின் சென்று
எட்டிப்பார்த்துக்கொண்டே
நாக்கை துருத்தியபடி
கண்களை பொத்தி முகம் மறைக்கும்
பிருந்தா குட்டியைப் போல
மலரும் சிருங்கார புன்னகையை உதிர்க்கும்
உனது முகமே போதும் எனக்கு
இனி மீண்டும்
இப்படி எல்லாம் நிகழப் போவதில்லை என்று தெரிந்து தான்
எழுதி கொண்டிருக்கிறேன் இதை

*

நான் இப்போது நிலம் பார்த்தபடி 
ஒரு நிச்சலனத்தில் 
அப்படியே இருக்கிறேன். 
எனக்குள் சுழலும் வர்ணங்களின் மாயமாகிய சின்னஞ்சிறு அன்பினையெல்லாம் 
என்னால் மட்டுமே உணர முடியும்; 
ஆனால் எல்லா வசந்தங்களும் எப்போதும் என்றைக்கும்
அப்படியே இருப்பதில்லை அல்லவா? அப்படித்தான்
உங்களுக்கெல்லாம் நான்
இப்போது ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன்.
நிஜத்தில்
என் மகிழ்வின் நிச்சலனச் சக்கரம் எப்போதோ சுழற்சியை நிறுத்தி விட்டது. ஆனால் அது இன்னும் சுழல்வதாய் உங்களை எண்ண வைத்தபடி சிரித்துக்கொண்டே
வெகுஇயல்பாய் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன செய்ய
பொழிவை இழந்த பின்னும்
பொழுது விடிந்து கொண்டுதானேயிருக்கிறது.

*

பிரியா பிரியங்கள் தவிர்த்து பின்தொடர
பிறகென்ன வேண்டும் மனமே
*
இயல்பில்
நீயில்லாமல் போனாலும்
நிகழ்ந்து கொண்டேதானிருக்கும்
சுழலும் இப்பெருவாழ்வு.
*
உங்களின்
எண்ண வரையறைக்குள்
என்றும் பொருந்தாதது
என் வண்ண வரைபடத்தின் கோணம்
*
முகில்களின் வழியே
--------------------------------
அலுவலகத்தின்
கண்ணாடி ஜன்னல்
வழியே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மேகங்களின்
இடப்பெயர்வை;



பள்ளி செல்வதற்காய்
சைக்கிளில்
செல்லும் போது
கல்லும் மண்ணுமாய்
இருந்த பாதையில்
சைக்கிளை
தள்ளிக்கொண்டு
நடந்து வருகையில்
சுசீலா உடனான
உரையாடல்கள்
தனியே
ஒரு
வெள்ளை முகிலில்
கடந்து போவதை
காண முடிந்தது;
அவ்வளவு
பெரிய வானத்திலும்
நாங்கள்
இளைப்பாற நின்ற
பெரிய புளியமரத்தின்
கீழே
உதிர்ந்து கிடந்த
புளியங்காய்
முகில் சில்லில்
கூசிப்போனது பற்கள்;
கொஞ்சம் பிற்பாடு
அலைஅலையாய்
தொடர்ந்து வந்த
முகில்கள் எல்லாம்
எழுப்பிய பெரும் சத்தத்தில்
எங்கள் ஊரிலிருந்து
எட்டு மணிக்கு கிளம்பும்
கே 5 பேருந்தின்
பச்சை வண்ணமும்
கத்தி கத்தியே

குரல் வற்றிப்போன
கண்டக்டர்
நடராஜன் அண்ணாவும்
கடந்து
போய்கொண்டிருகின்றனர்
கடைசியாய் போகும்
ஒரு மேகமுகிலில் ;
எல்லாமும்
தனியே
எந்த ஒரு
சலனமும் இல்லாமல்
நகர்ந்துகொண்டே
தான் இருக்கிறது.
அமர்ந்திருக்கும்
நாற்காலியின்
கீழிருக்கும்
சுழல் சக்கரம் போல
இங்கிருந்து நானும்
ஜன்னல்வழி
மேகங்களும்
தொடர்கின்றன
அலைவரிசைகளற்ற
பிரயாணங்களை..
*
படரும் இருளில் 
சுடரும் ஒளி 
~இவன்
*
தண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்
-------------------------------------------------------------------------------------------------
மிகச்சரியாக

வாழநினைத்து
இப்போது
தண்டவாளத்தில்
ஒரு ஒழுங்கில்லாமல்
சிதறிக்கிடக்கிறது
அவனின்
உடல் தசைகள்
தொடர்பற்று;
ரத்தசிவப்பு நிறம்
கொஞ்சம் கொஞ்சமாக
அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது.
சுற்றி நிற்பவர்களின்
அனேக அனுமானங்களும்
சில நிஜங்களும்
குறித்துக்கொள்ளபடுகின்றது
அவனின் கதைக்கான
கடைசி
அத்தியாய
பக்கங்களை
நிரப்புவதற்காய்.
இதோ
அவன் வந்துவிட்டான்
சுற்றி நிற்கும் அனைவருக்கும்
ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு
அவன் வேலையை ஆரம்பித்தான்
தசையின்
வாசம்
அவனது
நாசிகளுக்கு
எந்த நெடியையும்
ஏற்படுத்தவில்லை;
ஒவ்வொரு
துண்டுகளையும்
பார்த்துப் பார்த்து
மிகச்சரியாக எடுத்துக்கொண்டிருந்தான்.
அங்கிருப்போரின்
அழுகுரல்,


விசாரணைகள்,
எதுவும்
அவன் செவிகளுக்குள்
இறங்கவில்லை.
மொத்தமாக
எடுத்து ஓலைக்குள் வைத்து
அவிழாமல் அதே சமயம் இறுக்கங்கலற்று
மடித்துக்கட்டி
முடிந்துவிட்டதாய்
சமிக்ஞை செய்கிறான்
பீடியைப் புகைத்தவாறே...
அந்த இடத்தின்
கடைசிக்காட்சியாக
அவன் கைகளில்
சில நூறு ரூபாய்களுடன்
நடந்து போயகொண்டிருக்கிறான்
ஒரு முழுவாரத்தின்
பசித்த வயிறுடன்.
*
நிறமிழந்த உரையாடல்கள்
அந்த
வெற்றிடத்தில்
அவனைத்
தவிர
யாரும்
இல்லை.
மொத்தமாக
ஒரு
புள்ளி
துகளாக
அடையாளம்
காணப்படுதல்

அவனுக்கு
சாதரணமாகவே
இருந்தது.
எவ்வித
மிரட்சியையும்

ஏற்படுத்தவில்லை.
இப்பொழுது
எங்கு
இருக்கிறாய்
என
கேட்பவர்களிடம்
அவன்
சொல்லும்
பதில்
"இப்போதும்
அங்குதான்
இருக்கிறேன்"
கடைசியாக
பேசிய
ஒரு
முடிவற்ற
உரையாடலின்
மிச்சங்களை
போல
அத்தனை
அத்தனை
துகள்களும்
அவனுக்குள்
தனித்தனியே
அவரவர்
பெயருடன்


மின்னிக்
கொண்டிருப்பதை

அவன்
இன்னமும்
உணர்கிறான்.
உரையாடல்கள்
யாவும்
உயிர்ப்புடன்
உறைந்தே
கிடக்கிறது
எப்போதும்
இவனுள்
எதிர்முனை
மீள்ஞாபகம்
எப்போது
திரும்பும்
என
தெரியாமலே...
*

மனமெனும் பெருவெளி;
ஒரு வடிவத்தினுள் சிக்காத கலைடாஸ்கோப் சித்திரம்
*
எல்லோருக்குமான சின்ன சின்ன அன்பின் பிரார்த்தனைகளில் எல்லோருக்கும் பிரியமாய் பிரத்யேகமாய் விடிகிறது இந்த விழா நாளின்
மார்கழி அதிகாலை
*

தினமும் உழலும் மனதில்
தீராமல் சுழலும்
பச்சை வர்ண இச்சை மருகிய ஒற்றைச்சுருளாய்

ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்வில் வாய்த்திருக்கிறது 
ஒரே ஒரு ஒற்றைக் காதலிலை
*
வண்ணங்கள் மிளிரும் இந்த விழாக்காலத்தின் ஒளிரும் ஒற்றை நட்சத்திர வெளிச்சமாய் குளிரும் வெண்பனி இவ்விரவு
*
சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி-II
---------------------------------------------------------------
இது போல
ஒரு மாலைப்பொழுதினில்.
எங்கள் பழைய வீட்டின்
முன்னிருந்த
இன்னமும் என் நினைவுச்சில்லிலிருந்து
ஞாபகத்திற்கு வர மறுக்கும்
அந்த மரத்திலிருந்த பூவினை
அவளின் மருதாணி விரல்களால்
என் கைகளைப்பிடித்து
எல்லா விரல்களுக்கும்
பூ நகங்கள்
வைத்த உடன்
நான் 'தம்ராஜ் கில்விசனாய்'
மாறி
இருள் நீடிக்கின்றது
என்று நான் சொல்லிய போது,
கன்னங்கள் சிவக்க
அவள் சிரித்தது
அப்படியே
காட்சியாய் விரிந்தது


ஷக்திமானை பற்றி பேசிக்கொண்டிருந்த
இன்றைய மதிய வேளையினில்..
இரவுகளின்
ரம்மியமாய்
கனவு விழியின்
ஓரத்தில் அரும்பிய
பின்னொரு சமயத்தினில்
மணல் துகள்களில்
காந்தச்சில்லுகளைத்தேடி
பேய் துறத்தி
விளையாடியதில்
கிடைத்த
அரிதான பேய்களை பற்றி
அவளால் சொல்லப்பட்ட
கதையில் ஒன்றான
ஒற்றைக்கால் கருப்பி
இன்னமும் என்னுள்
வந்து போகிறாள்
அவளை நலம் விசாரித்ததாய்
சொல்லச்சொல்லி..
*

சித்திரப் பாவை
------------------------
பாதி சாய்த்த இரு
கோடுகளை இணைத்து
மேற்கூரையிட்டு அதன்மேல் 
புகைபோக்கி வைக்கிறாய்...
செவ்வகங்களை குறுக்கே
கோடிட்டு ஜன்னல் செய்கிறாய்...
'ப' வை தலைகீழாக்கி
'வா' வென வாசல் கதவுகளை
திறந்தே வைக்கிறாய்...

இருபுறமும் தலை சாய்த்து
வரவேற்பை உதிர்க்கிறது
கொன்றை மரப்பூக்கள்
சிவப்பும் மஞ்சளுமாய்...
மலையின் இடுக்கில்
சூரியனுடன் ஒளிந்து
விளையாடுகிறாய்...
ஆறுகளை எப்போதும்
அசுத்தமின்றியே காண்பிக்கிறாய்...
பட்டாம் பூச்சிகளை
பறக்கவிட்டு
பக்கத்தில் தேன் மலர்களை
சேர்த்தே செடியிடுகிறாள்...
வண்ண மீன்கள் நீந்திட
வெண்பக்கம் முழுதும்
நீல நீரிட்டிருக்கிறாய்...
பறவைகளை எப்போதும்
காற்றிலே மிதக்க வைத்து
பூமியே சுதந்திர கூண்டென்கிறாள்...
நீண்ட காகிதத்தில் எல்லாமும்
நிறைத்து வைக்கிறாய் நீ
இயற்கையின் ஓவியமாக;
பின் மேற்புறத்தின்
மத்தியில் தலைப்பூ இட்டு
இடப்பக்கத்தின் எதிரில்
கீழ்வாட்டில்...
பச்சை நிற கோலமிட்டு
மஞ்சள் பூக்களை உன்னை
சுற்றி தூவிக் கொள்கிறாய்...

ப.சுசீலா
5-ஆம் வகுப்பு 'ஆ' பிரிவு
என்றெழுதி..
*
யாருமற்ற சாலையில்
யாருக்காக கவிழ்ந்து 
கிடக்கிறது இத்தனை பூக்கள்;
யாரும் சூடாமலும் 
மணம் வீசத் தான் செய்கிறது மலர்கள்.
*
காற்றின் கால் நகர்விற்கேற்ப
தானும் மெல்ல தவழத் துவங்குகிறது
தரையில் விழும் முதல் பூ.
*
💚தலைகீழ் விகிதங்கள்💚
ஆம் 
இப்போதும்கூட
அவ்வப்போது
திருப்பிப் பார்த்துக்கொள்கிறேன்
ஏதுமற்ற பொழுதுகளின்
கருப்பு வெள்ளை காட்சிகளாய்
முடிவற்ற ஒரு அரைவட்டமாய்
சுழலும் அந்த சந்தோச நிழலினை.
நான் சுழியமாய் இருந்த போதிலும்
உங்களிடம் சொல்வதற்கு
என்னிடம் சுவாரஸ்யமான கதைகள்
எப்போதும் இருந்தன.
அத்தனையும் நிராகரிப்பின் கதைகள்
ஒரு சிலது சிறு புன்னகை தரும்
இன்னும் சிலது கோபமுற செய்யும்
அரிதாக சிலது
உங்களை காதலிக்க சொல்லும்
மற்றும் சில
என்னை பைத்தியக்காரன் என சொல்ல வைக்கும்.
இப்போது என்னிடம் கதைகளும் இல்லை
சொல்லவும் யாருமில்லை
கேட்கவும் ஆளில்லை
மெல்ல நகர்கிறது வாழ்வு
சுழலும் நினைவுகளுடன்.
*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி