எனப்படுவது யாதெனில்-II

😍
இப்போதைக்கு
கொஞ்சம்
புன்னகைகள்
கடன் கொடு;
காதலை
பிறகு
பார்க்கலாம்

😍
நீயும் நானும்
சேர்ந்து
மெதுவாக நகரும்
இந்த வரிசை
இன்னும் கொஞ்சம்
நீட்சித்திருக்கலாம்


😍
கொஞ்சமும்
புன்னகைக்காமல்
சற்று அனாயசமாக
புருவம் துருத்தி
நீ பார்க்கும்
பொழுதுகள்

😍
அவளின்
பேரன்பின்
பிரியம் நிறைந்த
அந்த ஒரு
பெரும் புன்னகைப்படம்
பிரதியெடுக்கவியலாதொரு
மீள்பிம்பம்

😍
இந்த
அர்த்தஜாமத்தில்
விழிகளில் இதயம் வைத்து
நீ அனுப்பும் அந்த ஒற்றை
குறுஞ்செய்தி

<3
இன்றைய மாலைநேர
தேநீர் இடைவேளையில்
நீ என்னை
கடந்து சென்ற நிமிடங்களை
சிருகச் சிருக
இப்போது மீட்கிறேன்;
பொழியும் பெருமழையினை
சொட்டுச் சொட்டாக
ஒரே கோப்பையில்
மொத்தமாக நிரப்புவதைப் போல

<3
குறைந்தபட்சம்
ஒரு நாளைக்கு ஒருமுறையேனும்
கோவப்படு;
புருவங்கள் சுருக்கி
கழுத்தை பக்கவாட்டில்
திருப்பிக்கொள்கையிலெல்லாம்
தேவதையில் இருந்து குழந்தையாய்
உருமாறும் மாயங்கள் யாவும்
உன் முகத்தில்
உனக்கே தெரியாமல் நிகழ்கிறது
<3

😍
காத்திருப்பு நாற்காலியில் அமர்ந்தபடி,
உனை கடந்து செல்லும் என்னை
லேசாக தலை சாய்த்து
பார்க்கும் போது
நீ சிந்தும் சின்னஞ்சிறு
சிருங்கார புன்னகைகள்

😍
நீயற்ற மழையில்
நான் அருந்திக் கொண்டிருக்கும்
இந்த காஃபியின்
ஒவ்வொரு மிடறும்
தொட்டிச்செடியின் மீது
மீண்டும் மீண்டும்
ஈரம் சொட்டும் துளிபோல
இன்றைய நாளின்
உன் நினைவுகளை
மெல்லிய மழைக்காற்றுடன்
இணைந்து
இந்த இரவினை இசைக்கிறது

😍
ஒன்றுக்கொன்று
சற்றும் தொடர்பற்ற
காட்சிகளின் நீட்சியாக
வளர்கிறது நம் உரையாடல் பெட்டிகள்
இப்படியாக ஒரு மாலைநேரம்
இப்படியாக ஒரு பயணம்
இப்படியே நாம்

😍
இப்படி ஒரு பொழுது
இப்படியாக ஒரு உரையாடல்
இப்படியே நாம்

😍
எங்கோ பார்ப்பது போல
நீ என்னை பார்ப்பதும்
சட்டென கண்நிமிர்த்துகையில்
எதுவுமே நடக்காதது போல நடிப்பதும்
இரு இணையா தண்டவாளங்களின்
இணைபிரியா பயணத்தின்
நிகழ்தகவு

😍
பேருந்தின்
வலது ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்திருக்கும்
யுவதியின் கைகளில் இருக்கும்
ஒரு சிறு இசையும்
அவ்வப்போது உபரியாய் நாணம் கலந்த
ஒரு சில புன்சிரிப்பும்
இந்நாளின் ஆசீர்வாதங்கள்
😍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி