இன்னமும் இருக்கிறது காதல் இதைவிடவும்

காகிதக் கப்பல்கள்
செய்து தரச்சொல்லிக் கேட்கிறாய்.
பாதியில் விட்ட
மழைக்கவிதை எழுதிய
காகிதங்களைத் தருகிறேன்.
ஒவ்வொன்றாய் மடித்து
கப்பலாக்கித் தந்தபின்
உன் கையிலிருந்து
நீரில் மிதந்து போகையில்
மின்னும் உனதந்த
சின்ன சந்தோஷத்தில்
மிக அழகாக முடிகிறது
மறுபாதி மழைக்கவிதை.
*
கச்சிதமாயும்
எளிதானதாகவும்
அமையவில்லை,
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்தும்
பார்க்காதது போல
நடிப்பது
ஏதேனும் ஒரு வகையில்
எப்படியும்
சொதப்பிவிடுகிறேன்
இன்னமும்.
*
எப்போதும் போல
அனிச்சையாக
நிமிர்ந்த ஒரு தருணத்தில்
எதிரினில் நின்றுகொண்டு
பேச்சுவாக்கில்
மிக லாவகமாய்
காற்றினை சிறை செய்து
கொஞ்சம் கொஞ்சமாக
விடுவிக்கிறாய்
சின்ன சின்னதாய்
புன்னகைகள் செய்து.
*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்